கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார அமைப்பு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவும் என அறிவுறித்தியது. அந்த அறிவுறுத்தலின் படி பல்வேறு முக்கிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் இம்மாதம் 29 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவிருந்த ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்திருந்தது. இதனையடுத்து ஐபிஎல் பயிற்சிக்காக சென்றிருந்த வீரர்கள், தங்களது பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடந்த உலகக்கோப்பை தொடருக்குப்பின் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்விலிருந்தார். இதனையடுத்து இம்மாத தொடகத்தில் தோனி தனது சக அணி வீரர்களுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பின் பிசிசியின் அறிவிப்பு காரணமாக தோனியும் பயிற்சியை பாதியில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பினார். பிசிசிஐயின் இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் சோகக்கடலில் மூழ்கினர்.