இந்திய அணி கடந்த மாதம் முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை 5-0 எனக் கைப்பற்றிய இந்திய அணி, சமீபத்தில் முடிந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்திடம் முழுமையாக இழந்தது.
இதனிடையே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்ததாக நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி வரும் 21ஆம் தேதி வெல்லிங்டனில் தொடங்குகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெல்லிங்டனில் முகாமிட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா, சக வீரர்களான முகம்மது சமி, ரிஷப் பந்த், சுப்மன் கில், நவ்தீப் சைனி உள்ளிட்டோருடன் இணைந்து விர்ட்சுவல் ரியாலிட்டி வீடியோ கேம் விளையாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வுபெற்ற பின், இந்திய டெஸ்ட் அணியில் நிரந்திர விக்கெட் கீப்பராக உள்ள சாஹா, விக்கெட் கீப்பிங் மட்டுமல்லாது தொடர்ச்சியாகப் பேட்டிங்கிலும் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறார். கடைசியாக வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றபோது சாஹாவின் விரலில் காயம் ஏற்பட்டது. பின்னர் காயத்திலிருந்து தேறிய சாஹா நியூசிலாந்து தொடரைக் கருத்தில்கொண்டு ரஞ்சி போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி தற்போது அவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருக்கிறார். இந்திய அணி ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.