ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டமான இன்று தமிழ்நாடு வீரர் நடராஜன் அறிமுகமானார். தனது அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய அவர், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற அவர் உறுதுணையாக இருந்தார்.
இதையடுத்து கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சௌவுந்தரராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நம் பாரத திருநாட்டிற்காக தன்னுடைய திறமையான பந்துவீச்சால் முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்து மேலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரத தேசத்திற்காக மென்மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடராஜனுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:IND vs AUS: ஷர்தூல், நடராஜன் உதவியால் ஒயிட் வாஷை தவிர்த்த இந்தியா