தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 17, 2019, 2:21 PM IST

ETV Bharat / sports

இந்திய அணியில் ஸ்பின் கிங்காக வலம்வந்த தமிழன் - #rashwin

இந்திய அணியில் குறுகிய காலத்தில் பல சாதனைகளை தன்வசம் கொண்டுவந்த சுழற்பந்து வீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினின் 33ஆவது பிறந்தநாள் இன்று.

Ravichandran Ashwin

இந்திய அணியின் 'அண்டர் செவன்ட்டின்' அணிக்காக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாட்களில் நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார். என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கேரம்பால் யுக்தியின் நாயகன் அஸ்வின்

முதலில் பேட்ஸ்மேனாக அறிமுகமான அஸ்வின் பின்னாட்களில் தனது 'கேரம்பால் யுக்தி'யின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொல்லி எடுத்துள்ளார். இவரின் இத்திறமையினால் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வின்

தோனியின் குட்புக்கில் இடம்பிடித்த அஸ்வின்

அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே தோனியின் கீ பவுலர் என்ற இலக்கை எட்டிப்பிடித்தார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டத்தின் பவர்பிளேவில் ஓவரை வீச தயங்கிய நிலையில் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பவர்பிளேவில் சகஜமாக தனது ஓவர்களை வீசியது மட்டுமில்லாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அஸ்வின் விக்கெட் வீழ்த்தியபோது

அந்தத் தொடரிலிருந்து தொடங்கிய அஸ்வினின் வெற்றிப் பயணம் அந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல காரணமாகவும் அமைந்தது. அதே ஆண்டே ஜிம்பாப்வேவில் நடைபெற்ற இந்தியா- இலங்கை-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தனது கால்தடத்தை பதித்தார்.

இந்திய அணியில் அஸ்வின்

சாதனை மேல் சாதனை புரிந்த ஒற்றைத் தமிழன்

அங்கிருந்து தொடங்கிய அஸ்வினின் சர்வதேச கிரிக்கெட் பயணம் 2011ஆம் ஆண்டு உச்சத்தை அடைந்தது. ஆம் ஒற்றைத் தமிழனாய் இந்திய உலகக்கோப்பை அணியில் வலம்வந்த அஸ்வின் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி கோப்பை வெல்வதற்கும் உறுதுணையாக இருந்தார்.

பயிற்சியின்போது

அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக இந்த இளம்புயல் அணியில் சேர்க்கப்பட்டார். தான் கலந்துகொண்ட முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன்வசம் ஈர்த்தார். அந்தத் தொடரில் மட்டும் அவர் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது முதல் தொடரிலேயே தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.

அதன்பின் அவர் சாதனைகளின் உச்சத்தை அடையும் விதமாக குறைந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி 50... 100... 150... 200... 250... 300 என அனைத்து நிலைகளிலும் அதிவேக விக்கெட்டுகள் எடுத்து சாதனைக்கு மேல் சாதனை படைத்துவந்தார்.

விக்கெட் கோரும்போது

பேட்டிங்கிலும் முத்திரை பதித்த அஸ்வின்

பந்துவீச்சில் தனது திறமையை பறைசாற்றிய அஸ்வின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்டில் இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணிக்கு சதமடித்து கைகொடுத்தார். அந்த இன்னிங்ஸில் அவர் ரோகித் சர்மாவுடன் ஏழாவது விக்கெட்டுக்கு இணைந்து 280 ரன்கள் என்ற பார்ட்னர்ஷிப்பை கொடுத்தார்.

இதுநாள் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாவது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரரானார். அதன் பின் 2016 ஆண்டு ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

சாதனையைத் தொடர்ந்து சோதனை

அதன்பின் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இளம் மணிகட்டு பந்துவீச்சாளர்கள் வருகையினால் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் அஸ்வின். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தன் தல தோனியுடன் கை குலுக்கும்போது

இதனைத் தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டுவந்த அவர் நடப்பு சீசனில் மான்கட் முறையில் ஜாஸ் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மீண்டும் பிரபலமடையத் தொடங்கினார்.

பட்லரின் விக்கெட்டை மான்கட் முறையில் வீழ்த்திய அஸ்வின்

நடப்பாண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை இந்திய அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அதற்கு பதிலாக இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற கவுண்டி அணியில் இடம்பிடித்து அங்கேயும் பேட்டிங், பவுலிங் என இரு பிரிவுகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

பந்துவீச்சில் புது யுக்தியும்... சர்ச்சையும்...!

அஸ்வினின் சர்ச்சைக்குரிய பந்துவீச்சு

இருப்பினும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக அவர் பந்துவீச்சில் கையாண்ட சில யுக்திகள் ரசிகர்களின் மனதில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதில் மிக முக்கியமாக நடப்பாண்டு நடைபெற்ற டி.என்.பி.எல். தொடரில் அவரின் பந்துவீச்சு மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது.

டி.என்.பி.எல். தொடரில் அஸ்வின்

இந்நிலையில் தற்போது நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பிடித்தாலும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்படவில்லை.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்

  • 65 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நான்கு சதங்கள் உள்பட 2,361 ரன்கள் விளாசியுள்ளார். ஏழு முறை தலா பத்து விக்கெட்டுகளுடன் 342 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்

  • ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் அஸ்வின் இந்திய அணிக்காக 111 போட்டிகளில் 675 ரன்கள் அடித்துள்ளார். 150 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்

  • சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் இவர் இந்திய அணிக்காக 46 போட்டிகளில் விளையாடி 123 ரன்கள் அடித்துள்ளார். 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2009ஆம் ஆண்டு முதல் அஸ்வின் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 139 போட்டிகளில் ஆடி 375 ரன்கள் எடுத்துள்ளார். 125 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பட்லரின் விக்கெட்டை மான்கட் முறையில் வீழ்த்திய அஸ்வின்

இன்று தனது 33ஆவது பிறந்த நாளை ரசிகர்களுடனும் தனது குடும்பத்துடனும் கொண்டாடிவரும் தனது தோல்வியை வெற்றியாக மாற்றும் திறமை படைத்த அஸ்வினுக்கு #HBDrashwin...

இதையும் படிங்க:

தாதா கங்குலியுடன் இணையும் அஸ்வின்!

தி பாய்ஸ் ஆர் பேக்... தமிழ்நாடு அணியில் முரளி விஜய், அஸ்வின்

அஸ்வினின் அநாகரிகமான பந்துவீச்சு - ரசிகர்கள் கொந்தளிப்பு

ABOUT THE AUTHOR

...view details