விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. முதல் சுற்று லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, மந்தீப் சிங் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியில் சிம்ரான் சிங் - குர்கிராத் சிங் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பாக விளையாடிய குர்கிராத் சிங், சதமடித்தார். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்கிராத் சிங் 139 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் அருண் கார்த்திக் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் - பாபா அபராஜித் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ஜெகதீசன் சதமடித்து ஆட்டம் இழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபாரஜித் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் நட்சத்திர வீரர் ஷாருக் கான் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் 49 ஓவர்கள் முடிவில் தமிழ்நாடு அணி வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: இரண்டாவது முறையாக கோப்பையைத் தன்வசமாக்கினார் ஒசாகா