இந்தியாவில் நடைபெற்றுவரும் பரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் தொடக்க நாளான இன்று குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணி தொடக்க வீரர் மயங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார்.
மறுமுனையில் இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய படிக்கல் சிறப்பாக விளையாடி அரைசதமடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த படிக்கல் 78 ரன்கள் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பவன் தேஷ்பாண்டே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை பதிவு செய்தார். அவரும் 65 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க கர்நாடக அணி 222 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் கோபால்-டேவிட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கர்நாடக அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் கோபால் 35 ரன்களுடனும் டேவிட் ரன் ஏதுமின்றியும் களத்திலுள்ளனர்.
தமிழ்நாடு அணி தரப்பில் சித்தார்த் இரண்டு விக்கெட்டுகளையும் அஸ்வின், அபரஜித், விக்னேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:தெற்காசிய விளையாட்டுப்போட்டி... கபடியில் தங்கங்களை வென்ற இந்தியா... பதக்கப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம்