நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் பி பிரிவுக்கான இன்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு - மணிப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்து வீச தீர்மானித்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மணிப்பூர் அணி தமிழ்நாடு அணியின் அபாரமான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், வரிசையாக பெவிலியனுக்குத் திரும்பினர். இறுதியில், அந்த அணி 18.4 ஓவர்களில் வெறும் 55 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ஒன்பது வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் ஆட்டமிழந்தனர். மீதமிருந்த இரண்டு வீரர்கள் டக் அவுட் ஆகினர். அணியில் அதிகப்பட்சமாக ஹோமேந்திரோ ஒன்பது ரன்கள் அடித்தார்.
தமிழ்நாடு அணி தரப்பில் நடராஜன் ஏழு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும், முருகன் அஸ்வின் எட்டு ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து, 56 ரன்கள் இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணி 4.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அசால்ட்டாக எட்டியது.