பொதுவாக, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் பலர், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடிவருகின்றனர்.
நாசர் உசைன் (இங்கிலாந்து), வீராசாமி பெருமாள் (வெஸ்ட் இண்டீஸ்), மகேந்திர நாகமுத்து (வெஸ்ட் இண்டீஸ்), முத்தையா முரளிதரன் (இலங்கை), ரசல் அர்னால்டு (இலங்கை) உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த வரிசையில் இடம்பெற்று இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளனர்.
தற்போது, அவர்களுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார். புதுக்கோட்டையை பூர்வீகமாகக்கொண்ட தென் ஆப்பிரிக்க வீரர் சீனுராம் முத்துசாமி டர்பனில் பிறந்தவர். இடதுகை பேட்ஸ்மேன், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் என ஆல்ரவுண்டராக வலம்வரும் 25 வயதான இவர், தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.