T20WorldCup: அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் நமிபியா அணி ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற நமிபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய நமிபியா அணியின் தொடக்க வீரர் ஸ்டீபன் பார்ட் 6 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த கோட்ஸே 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஹெகார்ட் எராஸ்மஸ்-ஜே.ஜே. ஸ்மித் இணை அணியின் ரன் கணக்கை உயர்த்தத் தொடங்கியது. சிறப்பாக விளையாடிய ஸ்மித் 22 பந்துகளில் 43 ரன்களை எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இதன்மூலம் நமிபியா அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் மண்ணைக்கவ்வியது.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நமிபியா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற ஜே.ஜே. ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.