ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஆறாவது மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மெல்போர்னில் இன்று நடைபெற்று வரும் இறுதி போட்டியில் இந்தியா - நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இதுவரை நடைபெற்ற ஐந்து டி20 உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிகளில், மூன்றுமுறை சேஸிங் செய்த அணிகளே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்பது கவனத்திற்குரியது. டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடுவது இதுவே முதன்முறை என்பதால், இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை டி20 போட்டிகளில் 19 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 13 முறையும் இந்திய அணி ஆறு முறையும் வென்றுள்ளது. இறுதியாக, இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.