6ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. நட்சத்திர வீராங்கனை ஷஃபாலி வர்மா 2 ரன்களில் முதல் ஓவரிலேயே நடையைக் கட்ட, அவரைத் தொடர்ந்து வந்த ஜெமீமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
இதன்பின் கேப்டன் ஹர்மன் - துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா களத்தில் இருந்தனர். ஸ்மிருதி மந்தனா மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடிக்க இந்திய ரசிகர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆனால், அந்த நம்பிக்கை அடுத்த ஓவரிலேயே தகர்ந்தது.
ஸ்மிருதி மந்தனா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, இந்திய அணி 22 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பரிதாபமான நிலையில் இருந்தது. இவரைத் தொடர்ந்து கேப்டன் ஹர்மன் நான்கு ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி உறுதியானது.
தொடர்ந்து வந்த தீப்தி ஷர்மா - வேதா கிருஷ்ணமூர்த்தி இணை சிறிது நேரம் சிங்கள்கள் எடுத்து ஸ்கோரை ஆமை வேகத்தில் உயர்த்தியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் வேதா 19 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய தீப்தி ஷர்மா 33 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து வந்த வீராங்கனைகளில் ரிச்ச கோஷ் மட்டும் 18 ரன்கள் எடுக்க மற்ற வீராங்கனைகள் அனைவரும் 1 ரன்னில் வெளியேறினர். இதனால் 19.1 ஓவர்களுக்கு இந்திய அணி 99 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக மெகன் ஷட் நான்கு விக்கெட்டுகளையும், ஜெஸ் ஜோனசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் ஐந்தாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது.