கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் முதல் உலகின் எந்த பகுதிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை. அனைத்து கிரிக்கெட் தொடர்களும் ஒத்தி வைக்கப்பட்டன.
தற்போது பல்வேறு நாடுகளிலும் கரோனா சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் முனைந்து வருகின்றன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் டார்வின் கிரிக்கெட் கிளப் சார்பாக 8 அணிகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை நடக்கவுள்ளது.
இதுகுறித்து டார்வின் கிரிக்கெட் கிளப் தலைவர் லச்லன் பெய்ர்ட் பேசுகையில், '' இந்தத் தொடரில் 8 அணிகள் விளையாடுகின்றன. மே 21ஆம் தேதி முதல் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாத மராரா கிரிக்கெட் மைதானம், கார்டன்ஸ் ஓவல், கசாலிஸ் ஓவல் ஆகிய மூன்று மைதானங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. 200 பேர்வரை போட்டிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். பந்துகளில் உமிழ்நீர் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம்'' என தெரிவித்தார்.