உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சயீத் முஷ்டாக் அலி கோப்பை கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. 38 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதி போட்டிக்கு தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி, கேதார் தேவ்தார் தலைமையிலான பரோடா அணியை எதிர்கொண்டது.
நேற்று (ஜன.31) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பரோடா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் தேவ்தார் 16 ரன்களிலும், நினத் ரத்வா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
தொடர்ந்து வந்த சொலன்கி நிதானமாக விளையாடி 49 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
20 ஓவர்கள் முடிவில் பரோடா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.