கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில், இப்பெருந்தொற்றுலிருந்து தமது நாட்டு மக்களை பாதுகாக்க உலகின் பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இதில் தற்போது இங்கிலாந்து, இந்தியா, இலங்கை ,உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு கிரிக்கெட் வீரர்களை பயிற்சிகளுக்கு திரும்ப ஒப்புதல் வழங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது பயிற்சிகளை அரசின் கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறையை பின்பற்றி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், 'பயிற்சியின் போது நான் பந்துவீச்சாளர்கள் இடையே பேசினேன் அவர்கள் என்னிடம் நீரைப் நீரைப் பயன்படுத்துவதைவிட வியர்வையை பயன்படுத்தும்போது பந்து சிறிது கனமாக இருப்பதுபோல் தோன்றுகிறது என்று கூறினர்.
ஆனால் அவர்கள் உமிழ் நீரை பயன்படுத்தும் போதுதான் பந்து மிகவும் பளபளப்பாகவும், ஸ்விங் செய்ய சுலபமாகவும் இருக்கும் என்று தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் இப்பயிற்சியின் போது தங்களது உமிழ்நீரை பயன்படுத்தாமல் வியர்வையை மட்டும் பயன்படுத்தி பயிற்சியை மேற்கொண்டனர்' என்று தெரிவித்தார்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பந்துவீச்சாளர்கள் தங்களது உமிழ்நீரை பயன்படுத்தக்கூடாது என தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.