இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேஸ்ட்மேனாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் கடந்த ஆக.15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
33 வயதே ஆன சுரேஷ் ரெய்னா ஓய்வை அறிவித்தது, ரசிகர்கள் மத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா, ஜம்மு காஷ்மீரிலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர தனக்கு அனுமதியளிக்கும் படி அம்மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பக் சிங் மற்றும் சந்தீப் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சுரேஷ் ரெய்னாவின் கடிதத்தில், ‘நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கான ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன். மேலும் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவையும், திறனையும் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க விரும்புகிறேன்.
அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பள்ளி, கல்லூரி கிராமப்புறங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது எனது நோக்கம்.
கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது அவர்களின் எதிர்கால வாழ்க்கையில்
ஒழுக்கத்தையும், மன ரீதியாகவும், உடல் ரீதியான ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.
ஒரு குழந்தை எந்தவொரு விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் பயிற்சியளிக்கும் போது, அவர்கள் தானாகவே வாழ்க்கை முறையின் ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படுவதோடு, உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வார்கள். மேலும் இவை நம் தேசத்தின் எதிர்காலமாகவும் இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ரெய்னாவின் கடிதம் பெற்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கிரிக்கெட் திறன்களை வளர்ப்பதில் நீங்கள் (ரெய்னா) எங்களுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இங்கு எங்கள் இளைஞர்களுடன் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பார்சிலோனா அணியிலிருந்து விலகும் மெஸ்ஸி!