இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று(ஆக.15) சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த சில மணி நேங்களிலேயே, சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்காக ரெய்னா அறிமுகமாகியிருந்தாலும், சிஎஸ்கே அணிக்காக ஆடிய பிறகு தான் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தவர் ரெய்னா.
அதைத்தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த ரெய்னா, ஃபிட்னெஸ் பிரச்னை காரணமாக, அணியிலிருந்து வெளியேறினார். பின்னர், கடந்த 2018ஆம் ஆண்டு வரை அவ்வப்போது இந்திய அணிக்காக ஆடிவந்தாலும், அதன்பிறகு இந்திய அணியில் அவரால் இடம்பிடிக்க முடியவில்லை.
இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், சென்னை அணியில் இன்று வரை ரெய்னா என்றுமே சின்ன தல தான். தோனிக்கு அடுத்தபடியாக முக்கிய வீரராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சுரேஷ் ரெய்னா, இன்று தோனியுடனான பயணத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், '' உங்களுடன் கிரிக்கெட் ஆடியது சிறப்பாக இருந்தது தோனி. இப்போது மிகவும் பெருமையுடன் உங்களுடைய பயணத்தில் நானும் இணைந்துகொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ள சம்பவம், அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தோனிக்கு பிடித்த வீரராக ரெய்னா இருந்தார்’