2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து சச்சின் தெண்டுல்கர் மனம் திறந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், இலங்கை இரண்டு விதமான ஆஃப் ஸ்பின்னர்களை பயன்படுத்தினார்கள். இதனால் பேட்டிங்கில் இடது, வலது பார்ட்னர்ஷிப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பது அர்த்தமுள்ளது என்று உணர்ந்தேன்.
வீரேந்தர் சேவாக், விராத் கோலி ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் தோனி களத்துக்கு வந்தார். நான் சேவாக்கிடம், விரூ பால்கனியில் நிற்க வேண்டாம் என்று கூறினேன். வீரர்கள் அறையில் அமர்ந்துக் கொள்ளுங்கள் என்றேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின்போது இதேபோன்று சேவாக்கிடம் கூறினேன். அப்போது நான் பிஸியோ மேஜையில் படுத்திருந்தேன். சேவாக் என் அருகில் இருந்தார். பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனுடன் சில யுக்திகள் குறித்து ஆராய்ந்தோம்.
இந்த முடிவு இந்தியா வெற்றிபெறுவதில் பெரும் பங்காற்றியது. இறுதிப் போட்டியில் கம்பீர் சதத்திற்கு மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் தோனியுடன் யுவராஜ் சிங் இணைந்தார். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தது. தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். தன்னுடைய அடையாளமான சிக்சரிலேயே அவர் அந்த ஆட்டத்தை முடித்தார்.