தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில், டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது காயத்தால் அவதிபட்டுவந்த தென் ஆப்பிரிக்க அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளரான ஸ்டெயின் இந்தப் போட்டியின் மூலம், மீண்டும் அணிக்குத் திரும்பி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். 178 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் 10 ரன்களில் ஸ்டெயின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிரின் சாதனையை முறியடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காக 35 போட்டிகளில் தாஹிர் 61 போட்டிகள் எடுத்த நிலையில், ஸ்டெயின் தனது 45ஆவது போட்டியில் 62 விக்கெட்டுகளை கைப்பற்றி இச்சாதனையை எட்டினார். இறுதியில், லுங்கி இங்கிடியின் அபாரமான பந்துவீச்சினால் தென் ஆப்பிரிக்க அணி இப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்டெயின் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர், கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இனி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் நிம்மதியடைவார்கள்... ஓய்வெடுங்கள் ஸ்டெயின்..!