ஆஸ்திரேலிய அணியின் லெக்-ஸ்பின்னராக அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், தற்போது உலகின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாது பிற அணி பவுலர்களை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாகவே இருக்கிறார். அதிலும் சமீபத்தில் ஆஷஸ் தொடருக்குப் பின் ஸ்டீவ் ஸ்மித் ஆடிவரும் ஆட்டம் ருத்ரதாண்டவமாகவே உள்ளது.
இதனிடையே ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஷெப்பீல்டு ஷீல்டு டெஸ்ட் தொடரில் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். இப்போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்சின் போது ஸ்டீவ் ஸ்மித் பவுலிங் செய்தார்.
அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த எதிரணியின் ஜோஸ் இங்லிஸ், ஸ்டீவ் ஸ்மித்தின் பந்தை கவுர் டிரைவ் ஆட முயன்றார். அந்த பந்து சில்லி பாயிண்டில் நின்றிருந்த ஃபீல்டரின் பேடில் பட்டு எகிறி எதிர்திசையில் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த வீரரின் கையில் பிடிபட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பேட்ஸ்மேன் சோகத்தோடு பெவிலியன் திரும்பினார்.
இப்போட்டியில் இரண்டு மெய்டன் உட்பட ஆறு ஓவர்களை வீசிய ஸ்மித், பத்து ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். முன்னதாக அவர், நியூ சவுத் வேல்ஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் 103 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் ஸ்மித்தின் நியூ சவுத் வேல்ஸ் அணி 223 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஸ்மித் பந்தில் அந்த வீரர் அவுட்டாகும் வீடியோ சமூகவலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதை பல்வேறு ரசிகர்களும் பகிர்ந்தனர். ஸ்மித் பேட்டிங் செய்தால் மட்டுமல்ல பவுலிங் செய்தாலும் எதிரணிக்கு தலைவலி தான் போல...