உலகின் பிரபலமான தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 284 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் முடிவில் மூன்று விக்கெட்களை இழந்து 124 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நான்காம் நாள் ஆட்டத்தில் ஸ்மித் - ஹெட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஏற்கனவே இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் காயம் காரணமாக பந்துவீசாத நிலையில், இன்றைய நாளில் கிறிஸ் வோக்ஸும் பந்துவீசாமல் இருந்தார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆஸ்திரேலிய இணை எவ்வித பதட்டமுமின்றி ரன்களை சேர்த்தனர். இந்த இணை நான்காவது விக்கெட்டுக்கு 130ரன்கள் சேர்த்த நிலையில், ட்ராவிஸ் ஹெட் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் 51 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.