தமிழ்நாடு

tamil nadu

ஐசிசி தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேறிய ஸ்மித்

By

Published : Aug 7, 2019, 12:33 AM IST

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீர்ர ஸ்மித் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி தரவரிசையில் டாப் 3இல் இணைந்த ஸ்மித்!

கிரிக்கெட்டில் பல வீரர்கள் கம்பேக் தந்தாலும், சமீபத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் கம்பேக் அனைவரது புருவத்தையும் உயரச் செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேப் டவுனில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பென்கிராஃப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கினர். இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இவர்களுக்கு கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடைவிதித்தது.

இந்த தடை முடிந்த நிலையில், வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பென்கிராஃப்ட் ஆகியோர் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் ஆஷஸ் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கம்பேக் தந்தனர். இதில், வார்னர், பென்கிராஃப்ட் சொதப்பினாலும் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக பேட்டிங் செய்தார். இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 25ஆவது சதத்தையும் அவர் எட்டி சாதனைப் படைத்தார்.

நாதன் லயனுடன் ஸ்மித்

பேட்டிங்கில் ஸ்டீவ் ஸ்மித்தும், பவுலிங்கில் நாதன் லயன் ஆகியோரும் கைகொடுத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 857 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது 46 புள்ளிகள் பெற்று 903 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதேசமயம், இப்பட்டியலில் 881 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் புஜாரா, நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.

பந்துவீச்சை பொறுத்தவரையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயன் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமின்றி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

இதனால், 19ஆவது இடத்தில் இருந்த லயன் தற்போது ஆறு இடங்கள் முன்னேறி 732 புள்ளிகளுடன் 13ஆவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல், மற்றொரு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான பெட் கம்மின்ஸ் 898 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இதில், இரண்டாவது இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 831 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால், மூன்றாவது இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா 851 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details