இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் என்றாலே நிச்சயம் அந்த போட்டியில், ஸ்லெட்ஜிங், சண்டைகள், வாக்குவாதங்கள் இருக்கும். ஏனெனில் இந்த இரு அணிகள் மோதும் சமயத்தில் இதுபோன்ற காரசாரமான நிகழ்வுகள் மைதானத்தில் நடப்பது என்பது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதினால் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே போன்ற எதிர்பார்ப்பு இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணியின் போட்டிகள் மீதும் எழும். அதிலும் குறிப்பாக இரு அணிகளுக்கு இடையே மட்டுமே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டி என்பது மிகவும் கவுரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது இரு அணிகளும் பங்கேற்றுள்ளன. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித், ஃபேன்கிராஃப்ட் உள்ளிட்டோர் ஓராண்டு தடைக்கு பிறகு மீண்டும் அணியில் இடம்பிடித்தனர். அப்போட்டியில் வார்னர் மீது இங்கிலாந்து ரசிகர்கள் படுமோசமாக நடந்துகொண்டதோடு, மைதானத்தில் இருந்து சாண்ட் பேப்பரைக் காண்பித்து அவரை வம்புக்கு இழுத்த சம்பவங்களும் அரங்கேறின.
அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து இங்கிலாந்து ரசிகர்களின் கேலிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு மட்டுமல்லாது அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில், 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது. இப்போட்டியிலும் வார்னர் உள்ளிட்ட மேல்வரிசை வீரர்கள் சொதப்பியதால் ஆஸ்திரேலிய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பிராடு, ஸ்டோக்ஸ், வோக்ஸ் உள்ளிட்டோரின் பந்துகளை ஆடாமல் தவிர்த்துவிட்டார். டெஸ்ட் போட்டிகளில் ஸ்லிப் ஃபீல்டர்கள் நிறுத்தப்படுவதால் வேகப்பந்துவீச்சை ஆடாமல் விடுவது வழக்கம் தான் இதில் என்ன இருக்கிறது என கேட்கலாம்.
ஆனால் இதில் உள்ள விஷயம் என்னவென்றால் ஸ்மித், பந்தை விட்டதோடு நிற்காமல், காலை தூக்குவது, பேட்டை அங்கும் இங்கும் ஓங்குவது, தாவுவது, சுற்றி நிற்பது போன்ற செய்கைகளை செய்து இங்கிலாந்து பவுலர்களை கடுப்பாக்கினார். அவர் நடனம் ஆடுவது போன்ற இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.