டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் என்றால் அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஏனெனில், பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கி ஓராண்டு தடைக்குப் பிறகு, தற்போது நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரில் அவர் விளையாடிவருகிறார். இதில், அவர் ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், இரண்டு அரைசதம் என 671 ரன்களை குவித்துள்ளார்.
இவரது சிறப்பான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி நடைபெற்ற நான்கு போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரில் முன்னிலை வகிக்கிறது. தனது சிறப்பான பேட்டிங்கால் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பலரும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்திறனைக் கண்டு அவர்தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன் என பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இவரது கம்பேக் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் டால்க் ஸ்போர்ட் மீடியாவிடம் கூறுகையில்,
"அவர் என்னதான் சிறப்பாக விளையாடினாலும், 2018ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் ஈடுபட்டதுதான் அனைவரது நினைவில் இருக்கும். அந்த தவறை நீங்கள் கூட மன்னிக்க மாட்டீர்கள். ஏமாற்றுக்காரராக நீங்கள் அறியப்பட்டால், கல்லறைக்குச் செல்லும் வரை, அந்த அவப்பெயரை மாற்ற முடியாது. ஸ்டீவ் ஸ்மித், பென் கிராஃப்ட், வார்னர் ஆகியோர் மீது அனைவருக்கும் இந்தக் கருத்துதான் தோன்றும். ஏனெனில், அவர்கள் கிரிக்கெட் விளையாட்டை அசிங்கப்படுத்திவிட்டார்கள்" என்றார்.
பிற நாட்டு வீரர்கள் கூட ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்திறனை பாராட்டி வரும் நிலையில், இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 63 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் ஹார்மிசன் மொத்தம் 302 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2005 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இவர் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.