AUSvSL: ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி கடந்த அக்டோபர் 27ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் அதிரடியாக விளையாடிய வார்னர் 56 பந்துகளில் 10 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் விளாசி 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 ரன்களைக் குவித்தது.
அதன்பின் சேஸிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நாளை பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பங்கேற்கமாட்டார் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு பதிலாக அந்த அணியின் சர்ச்சை பந்துவீச்சாளரான சீன் அப்பாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் கூறுகையில், ‘மிட்சல் ஸ்டார்க் தனது தம்பியின் திருமணத்திற்கு செல்லவேண்டியுள்ளதால் அவரால் நாளைய போட்டியில் பங்கேற்க இயலாது. அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சீன் அப்பாட் நாளைய போட்டியில் பங்கேற்க வாய்புள்ளது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: குட்டி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த வார்னர்