ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக டிச.17ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் இந்திய அணியுடனான டி20 தொடரிலிருந்து விலகிய ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நாளை அணியில் இணையவுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனிப்பட்ட காரணங்களால் டி20 தொடரிலிருந்து விலகிய ஸ்டார்க், தற்போது டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இணையவுள்ளார். தற்போது சிட்னியில் உள்ள ஸ்டார்க், ஆஸ்திரேலிய ஏ அணியினருடன் இணைந்து அடிலெய்டிற்கு நாளை வரவுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
ஸ்டார்க் மீண்டும் அணியில் இணைவது குறித்து ஆஸி., அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், "இக்கட்டான சூழலில் ஸ்டார்க் தனது குடும்பத்தாரோடு நேரம் செலவிடுவதற்கு அனுமதித்ததை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது அவர் மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளதால், அவரை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நியூசிலாந்து டி20 தொடரிலிருந்து பாபர் அசாம் விலகல்