உலகக்கோப்பை தொடருக்குப்பின் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இதில் முதலிரண்டு போட்டிகளிலும் அபாரமாக வென்ற இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதாஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணியில், தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து கேப்டன் திமுத் கருணாரத்னே, குஷல் பெரெரா ஆகியோர் நிதான ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். பின்னர் திமுத் 46, குஷல் பெரெரா 42 ரன்னிலும் வெளியேறினர்.
அடுத்து வந்த குஷல் மெண்டிஸ் ஆஞ்ஜெல்லோ மேத்யூஸ் ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மெண்டிஸ் 54 ரன்களில் வெளியேறினார். பின்னர் தசன் ஷனாகா 30, ஷேகன் ஜெயசூர்யா 13, ஹசரங்கா 12 எடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய மேத்யூஸ் 87 ரன்னில் அவுட்டாகினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களை குவித்தது. வங்கதேச பந்துவீச்சில் அதிகபட்சமாக ஷஃப்பில் இஸ்லாம் சர்க்கார் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுக்கத் தொடங்கியது. அந்த அணியின் சவுமியா சர்க்காரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஒரு கட்டத்தில் சர்க்கார் 69 ரன்னில் ஆட்டமிழந்ததையடுத்து வங்கதேச அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் வங்கதேச அணி 36 ஓவரிலேயே 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.