பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ராவல்பிண்டி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதன் மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால், இப்போட்டியை நேரில் காண அந்நாட்டு ரசிகர்கள் ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர்.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய திமுத் கருணாரத்னே - ஒஷாடா ஃபெர்னாண்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்து வந்தனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களைச் சேர்த்த நிலையில், திமுத் கருணா ரத்னே 56 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, ஃபெர்னாண்டோ 40 ரன்களில் அவுட்டாக, அதன்பின் வந்த இலங்கை வீரர்கள் குசால் மெண்டீஸ் (10), தினேஷ் சண்டிமால் (2) ஆகியோர் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.