டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதன்பின்னர் டெல்லி அணிக்கு தவான் - ரஹானே இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் முதல் ஓவரிலேயே டெல்லி அணிக்கு ஹைதராபாத் அணி அதிர்ச்சி கொடுத்தது. ஷிகர் தவான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கேப்டன் வார்னரிடம் கேட்ச் கொடுக்க, டெல்லி அணி ரசிகர்கள் தலையில் கையை வைத்தனர். பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார்.
ஆனால் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி அதே அதிர்ச்சியை ஹைதராபாத் அணி டெல்லிக்கு கொடுத்தது. இதன் பின்னாலாவது கேப்டன் இன்னிங்ஸை பார்க்கலாம் என நினைத்தால், ஹெட்மயரை டெல்லி அணி களமிறக்கியது. ரஹானேவுடன் இணைந்த ஹெட்மயர் பவுண்டரிகளை விளாசினார்.
இதனால் பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 54 ரன்களை எடுத்தது. பின்னர் ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் வீசிய 7ஆவது ஓவரில் ஹெட்மயர் 16 ரன்களிலும், ரஹானே 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் களத்திற்கு வந்தனர்.