ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரராக இருந்து, பின்னர் பல்வேறு கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றியவர் டாம் மூடி. இவர், கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
அதிலிருந்து ஏழு ஆண்டுகள் அவர் தொடர்ச்சியாக ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார். இவரது பயிற்சி காலத்தின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு முறை சாம்பியன் பட்டத்தையும், நான்கு முறை பிளே ஆஃப் சுற்றுவரையும் முன்னேறியது.
அதன்பின் நடப்பாண்டு ஐபிஎல் சீசனின் போது டாம் மூடிக்கு பதிலாக, உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த ட்ரெவர் பேலிஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்று (டிசம்பர் 15) டாம் மூடியை தனது அணியின் கிரிக்கெட் இயக்குநராக நியமித்துள்ளது. இது குறித்து, எஸ்ஆர்எச் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் இயக்குநராக டாம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க:முஷ்டாக் அலி தொடரில் யுவராஜ் சிங்?