இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுவருகிறது. மேலும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தது.
இதையடுத்து இத்தொடரில் விளையாடுவதற்கான வீரர்கள் பதிவு நேற்று முன்தினம் (பிப். 4) முடிந்தது. இதில், 21 இந்திய வீரர்கள் உள்பட 207 சர்வதேச வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவுசெய்துள்ளனர். இணை நாடுகளைச் சேர்ந்த 27 வீரர்கள், ஐபிஎல் விளையாடாத 863 வீரர்கள் என மொத்தம் ஆயிரத்து 97 வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து பதிவுசெய்துள்ளனர்.
இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தும் தனது பெயரைப் பதிவுசெய்துள்ளார். ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சூதாட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்தது.