தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் (பாக்ஸிங் டே) டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
இலங்கை முதல் இன்னிங்ஸ்
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் கருணரத்னே, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த தனஞ்ஜெய டி சில்வா - சண்டிமால் இணை அரைதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் 85 ரன்களில் சண்டிமால் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து டி சில்வா 79 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிபாம்லா நான்கு விக்கெட்டுகளையும், முல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
டூ பிளேசிஸ் அதிரடி
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர்கள் எல்கர் - மார்க்ரம் இணை சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட எல்கர் 95 ரன்களிலும், மார்க்ரம் 68 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களையடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் பாப் டூ பிளேசிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டூ பிளேசிஸ் 199 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்து இரட்டை சதமடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 621 ரன்களை எடுத்தது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், ஃபெர்னாண்டோ 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி
பின்னர் 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். இதில் ஆறு வீரர்கள் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் இந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த குசால் பெரேரா மற்றும் ஹசரங்கா இருவரும் அரைசதமடித்தனர். ஆயினும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இங்கிடி, நோர்ட்ஜே, முல்டர், சிபாம்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாப் டூ பிளேசிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க:வங்கதேச சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய வெ.இண்டீஸ் வீரர்கள்!