தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி திரில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா! - இரண்டாவது டி20 போட்டி

போர்ட் எலிசபெத்: தென் ஆப்பிரிக்க - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.

RSA beat Aus by 12 runs
RSA beat Aus by 12 runs

By

Published : Feb 23, 2020, 11:48 PM IST

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. இதனிடையே இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

அதனையடுத்து, களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் மறுமுனையில் ஹெண்ட்ரிக்ஸ் (14), டூ பிளெசிஸ் (15) எனப் பெவிலியன் திரும்பினர்.

பின் டி காக்குடன் ஜோடி சேர்ந்த டவுசன் நிலைத்து ஆடி அணிக்கு பங்களித்தார். இதில் சிறப்பாக விளையாடிய டி காக் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது ஐந்தாவது அரைசதத்தை பதிவுசெய்து அசத்தினார். பின்னர் அவரும் 70 ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களைச் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், பின்ச் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். ஆனால் பின்ச் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிகிடி பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த ஸ்மித்தும் 29 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிவந்த வார்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 15ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் அவரும் 67 ரன்களில் ஆட்டமிழந்ததால் வெற்றி தென் ஆப்பிரிக்க பக்கம் திரும்பியது. பின் கடைசி இரண்டு ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலையில் பந்துவீசிய தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 19ஆவது ஓவரில் மூன்று ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்

இதனையடுத்து ஆட்டத்தின் இறுதி ஓவரை வீசிய அன்ரிச் நார்ட்ஜேவும் நான்கு ரன்களை மட்டும் விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது டி20 போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

மேலும் இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணி 1-1 என்ற கணக்கில் சமன்படுத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி வரும் 26ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறவுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெறச் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயிண்டன் டி காக் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இதையும் படிங்க: புதிய சாதனையில் தடம்பதித்த ரொனால்டோ!

ABOUT THE AUTHOR

...view details