இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 254 ரன்கள் அடித்திருந்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தபோது, இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தென்னாப்பிரிக்க அணியில் டி ப்ரூயின் 20 ரன்களிலும், அன்ரிச் நார்டே இரண்டு ரன்களிலும் களத்திலிருந்தனர். தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்டத்திலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டு, தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர்.
முகமது ஷமியின் பந்துவீச்சில் அன்ரிச் நார்டே மூன்று ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஓரளவிற்கு களத்தில் தாக்குப்பிடித்த டி ப்ரூயின் 30 ரன்களுக்கு உமேஷ் யாதவ் பந்துவீச்சில் நடையைக் கட்டினார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 53 ரன்களுக்கே ஐந்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது.