இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி இத்தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்டர் டெம்பா பவுமா, காயம் காரணமாக, முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், கூறுகையில்,
' இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் பவுமா, தனது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தகவலின்படி அவர் முதல் நிலை காயமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்' எனத் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி காயம் காரணமாக, இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது பவுமா காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளது, தென் ஆப்பிரிக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காயம் காரணமாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்!