அடிலெயிட்:மகளிர் பிக் பாஷ் டி20 தொடரில் நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைன் தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஐந்து சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் வருகைக்குப் பிறகு, தற்போது தொடர்ச்சியாக சிக்சர் அடிப்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதுவரை ஆடவர் கிரிக்கெட் வீரர்களே இதில் ஆதிக்கம் செய்துவந்த நிலையில், தற்போது நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டிவைன் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நியூசிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வலதுகை வீராங்கனையான இவர் , தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிக் பாஷ் டி20 தொடரில் அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார்.
நேற்று அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அடிலெயிட் ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ஸ்டோர்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெயிட் அணியில் தொடக்க வீராங்கனையாக சோஃபி களமிறங்கினார்.
ஆரம்பத்திலிருந்து நிதானமாக விளையாடிய இவர், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை அடுத்த கியருக்கு எடுத்துச் சென்றார். 19ஆவது ஓவரின் இறுதி பந்தில் பவுண்டரி அடித்தார். அதன்பின், கடைசி ஓவரில் கேடி மாக் சிங்கிள் எடுக்க, மெடிலின் பென்னா வீசிய அந்த ஓவரின் மற்ற ஐந்து பந்துகளையும் ஐந்து சிக்சர்கள் அடித்து ரூத்ரதாண்டவம் ஆடினார் சோஃபி.
அதுவரை 51 பந்துகளில் 55 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த சோஃபி, கடைசி ஓவரில் செய்த மேஜிக்கால் 55 பந்துகளில் 85 ரன்கள் விளாசினார். இதைத்தொடர்ந்து பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் இவர் கெத்துக் காட்டியுள்ளார். நான்கு ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே வழங்கி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவரில் இவரது அதிரடியான ஆட்டத்தால் அடிலெயிட் அணி இப்போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கைப் போன்று ஒரே ஒவரில் ஆறு பந்துகளிலும் சிக்சர் அடிக்கும் சாதனையை நூலளவில் தவறிவிட்டார். இருந்தாலும், அடுத்தப் போட்டியில் அவர் சந்திக்கும் முதல் பந்தில் சிக்சர் விளாசினால் தொடர்ந்து ஆறு பந்தில் ஆறு சிக்சர் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனைப் படைக்க இவருக்கு வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: உலக கிரிக்கெட் வரலாற்றில் யுவி நிகழ்த்திய மேஜிக்; நாஸ்டால்ஜிக் மெம்மரிஸ் ரீவைண்ட்..! #OnThisDay ❤