கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அந்தந்த நாட்டு அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் பொது இடங்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால் சென்னையில் அதுபோன்ற சூழல் இதுவரை காணப்படவேயில்லை என இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஷ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ''வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் கொரோனாவால் நிலவும் சூழல் இதுவரை சென்னை மக்களை சேரவில்லை என நினைக்கிறேன். சென்னையில் அதிகமான வெயில் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவாது என்ற வதந்தி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது அல்லது கொரோனா வைரஸால் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள். இதனால்தான் சென்னையில் கொரோனா பற்றி விழிப்புணர்வின்றி மக்கள் உள்ளார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.