ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருக்கும் நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி, இரண்டாவது இடத்திலிருக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த சீசனில் விளையாடிய 12 போட்டிகளில் 10 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் இன்றைய ஆட்டத்திலாவது மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
68 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் உட்பட 109 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது. சிட்னி சிக்சர்ஸ் அணி தரப்பில் டாம் கரண் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 176 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜோஷ் பிலப், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர். இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி 18.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டை மட்டும் இழந்து 176 ரன்களை எட்டியது. 42 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் உட்ப 61 ரன்களுடன் ஜோஷ் ஃபிலிப் ஆட்டமிழந்தார். மறுமுனையில், பொறுப்புடன் விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் 40 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார்.
இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி இப்போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி சந்திக்கும் 11ஆவது தோல்வி இதுவாகும். இதன்மூலம் அந்த அணி புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் உள்ளது. மறுமுனையில், சிட்னி சிக்சர்ஸ் 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்த தொடரின் கடைசி லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் பிரிஸ்பேன் ஹீட் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியிலாவது மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:யு 19 உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் அடியடுத்து வைத்த இந்தியா!