தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விராட் கோலிக்கு அலர்ட் தரும் ஸ்டீவ் ஸ்மித் - விராட் கோலியின் ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில், முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் நெருங்கியுள்ளார்.

விராட் கோலிக்கு அலர்ட் தரும் ஸ்டீவ் ஸ்மித்

By

Published : Aug 19, 2019, 7:19 PM IST

கடந்த சில தினங்களாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் குறித்துதான் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பதிவிட்டு வருகின்றனர். பந்தை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியப் பிறகு, இவர் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் கம்பேக் தந்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தினார்.

அதேபோல், லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள், பெவிலியனுக்கு திரும்பினாலும், இவர் நிலையான ஆட்டத்தை கடைபிடித்து அணிக்கு நம்பிக்கை தந்தார். இவர் ஆஷஸ் தொடரில், மூன்று இன்னிங்ஸில் 328 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில், 903 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித், தற்போது 10 புள்ளிகள் அதிகம் பெற்று 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம், 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கும், ஸ்மித்துக்கும் இடையே ஒன்பது புள்ளிகள்தான் வித்தியாசம். தனது சிறப்பான ஃபார்மை ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து வெளிப்படுத்தினால், கூடிய விரைவில் முதலிடத்தை பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 22 ஆன்டிகுவாவில் தொடங்கவுள்ளது. இதனால், இந்தத் தொடரில் கோலி சிறப்பாக பேட்டிங்செய்வார் என்பதால், தரவரிசைப் பட்டியலில் கோலிக்கும், ஸ்மித்துக்கும் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

வில்லியம்சன்

முன்னதாக, இப்பட்டியலில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், 913 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இவர், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், நான்கு ரன்கள் மட்டுமே எடுத்ததால், 26 புள்ளிகள் சரிவடைந்து 887 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதேசமயத்தில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் கேப்டன் திமித் கருணாரத்னே சதம் விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார். இதனால், இவர் நான்கு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

கருணாரத்னே

ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல்

  1. விராட் கோலி (இந்தியா) - 922 புள்ளிகள்
  2. ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 913 புள்ளிகள்
  3. கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 887 புள்ளிகள்
  4. புஜாரா (இந்தியா) - 881 புள்ளிகள்
  5. ஹென்றி நிக்கோலஸ் (நியூசிலாந்து) - 770 புள்ளிகள்
  6. மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா) - 719 புள்ளிகள்
  7. டி காக் (தென்னாப்பிரிக்கா) - 718 புள்ளிகள்
  8. திமுத் கருணாரத்னே (இலங்கை) - 716 புள்ளிகள்
  9. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 710 புள்ளிகள்
  10. டூப்ளெஸிஸ் (தென்னாப்பிரிக்கா) - 702 புள்ளிகள்

ABOUT THE AUTHOR

...view details