உலகம் முழுவதிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகின்ற 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மக்களின் இந்தப் பண்டிகையை வரவேற்கும்விதமாக டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. அதில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு தொலைக்காட்சி, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் காணொலியில் கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அவர்களின் ஆசை குறித்தும் விருப்பமான விளையாட்டு வீரர்கள் குறித்தும் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு குழந்தைகள் பல விளையாட்டு வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர்.
இவையனைத்தையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது டேப்லெட்டில் பார்க்கிறார். பின்பு கோலி கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு அந்தக் காப்பகத்திற்குச் சென்று குழந்தைகள் கேட்ட பரிசுகளை அளிக்கிறார்.
அதைத் தொடர்ந்து குழந்தைகளிடம் யாரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டபோது அவர்கள், திரைப்பட கதாபாத்திரங்களான ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டனர். பின்னர் அவர்களிடம் ஸ்பைடர்மேன், சூப்பர்மேன் ஆகியோர் விடுமுறையில் சென்றுள்ளதால், விராட் கோலியை பார்க்க விருப்பமா எனக் குழந்தைகளிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு குழந்தைகள் சரி என்று சொல்லவே, உடனடியாகக் கோலி தனது கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தை கலைத்து அவர்கள் முன்பு தோன்றினார்.
கோலியைக் கண்டதும் உற்சாகமடைந்த குழந்தைகள் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கினர். பின்னர், குழந்தகள் கோலியை கட்டித்தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கோலி, காணொலியின் இறுதியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தக் காணொலி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவிவருகிறது.