ஆங்கிலேயர்களை ஆண்ட அந்த வீரர்:
1930, 40களில் ஆங்கிலேயர்கள் உலகத்தை ஆண்டபோது 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரர் தனது பேட்டிங்கால் அந்த ஆங்கிலேயர்களையே ஆண்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் படைத்த சாதனை இன்று மட்டுமல்ல நூறாண்டுகள் கழிந்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கும்.
தற்போதை நவீனக் கால கிரிக்கெட்டில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பல விதிமுறைகள் இருக்கின்றன. இதனால், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பேட்டிங்கில் பல்வேறு சாதனைகளை முறியடித்தும், படைத்தும் வருகின்றனர்.
கிரிக்கெட்டின் ரியல் டான்:
ஆனால், ரூல்ஸ் இவர்களுக்கு சாதகமாக இருந்தாலும், அந்த 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட வீரரின் சாதனை இனிவரும் பேட்ஸ்மேன்களாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. ஏனெனில், டான்-ஐ யாராவது தொட்டுப்பார்க்க முடியுமா. ஆம், கிரிக்கெட்டில் டான் என்றழைக்கப்படும் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் பற்றிதான் பார்க்கபோகிறோம்.
டான் பிராட்மேன் என்றாலே நமக்கு அவரது பேட்டிங் ஆவரேஜ்தான் முதலில் ஸ்ட்ரைக் ஆகும். ஆனால், அதுமட்டுமின்றி அவர் பல அசாதாரண சாதனைகளை படைத்துள்ளார். அவர் மற்ற வீரர்களிடமிருந்து சற்று மாறுப்பட்டவர். ஏனெனில், நவீன கால கிரிக்கெட் எப்படி இருக்கும் என்பதை அக்காலத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் காண்பித்தவர் அவர்.
இப்படி காலம் கடந்தும் பிரமிக்க வைக்கும் இந்த டான் அந்த காலத்தில் எப்படி பேட்டிங் செய்திருப்பார் என்று நமக்கு தெரியாது. ஆனால், கண்மூடி ஒரு நொடியாவது அவரது பேட்டிங்கை நாம் கற்பணை செய்து பார்ப்போம்.
டா.மு. டா.பி:
இவரது அசாத்திய பேட்டிங்கால், டெஸ்ட் கிரிக்கெட்டை டானுக்கு முன் (டா.மு) டானுக்குப் பின் (டா.பி) என்றே பிரிக்கலாம். ஏனெனில் இவரது வருகைக்கு பிறகுதான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வீரர்களுக்கு ரசிகர்களிடம் முக்கியத்துவம் கிடைத்தது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் மீது மட்டுமில்லாமல் டென்னிஸ், கோல்ஃப் போன்ற விளையாட்டின் மீதும் அதீத ஈர்ப்புக் கொண்டவர். ஆனாலும் கிரிக்கெட்டுக்கு இவர் மேல் இருந்தக் காதலால்தான் அவர் கிரிக்கெட்டின் பிதாமகன் ( God father of cricket) ஆனார்.
டானின் பேட்டிங் பயிற்சி ரகசியம்:
தனது வீட்டின் பின் முற்றத்தில் இருக்கும் வாட்டர் டாங்கில், ஸ்டெம்பையும் கோல்ஃப் பந்தையும் வைத்துதான் இவர் பேட்டிங் பயிற்சியே எடுத்தார். உருண்டை வடிவத்தில் இருக்கும் அந்த டேங்கின் மீது இவர் அந்த கோல்ஃப் பந்தை வீசுவார். அது டாங்க் மீது பட்டு பல்வேறு கோணங்கலில் வருவதை ஸ்டெம்பால் எதிர்கொண்டு பயிற்சி செய்வார். இதுதான் டானின் பேட்டிங் ரகசியம். இந்தப் பயிற்சிதான் போட்டியின்போது பந்தை ஃபுட் ஒர்க்கிலும், டைமிங்கிலும் எதிர்கொள்ள அவருக்கு உதவியது.
மேற்குறிப்பிட்டதைப் போலேவே, 1928ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான இவர், 1930 ஆண்டிலேயே தனது 7ஆவது போட்டியிலேயே தான் யார் என்பதை உலகிற்கு உணர்த்தினார். இவரது ஆட்டத்தை பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு மைதானத்துக்கு வருகை தருவார்கள்.
ஒரே நாளில் முச்சதம் அடித்த முதல் வீரர்:
தற்போது நிலவும் நவீனக் கால கிரிக்கெட்டை 1930ஆம் ஆண்டு லீட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட்டில்தான் அறிமுகப்படுத்தினார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 11 பந்துகளை எதிர்கொண்ட போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர், களமிறங்கிய டான் தனது பேட்டால் பந்தை அடித்ததெல்லாம் பவுண்ட்ரிதான். இதனால், உணவு இடைவேளையின்போதே அவர் சதத்தை எட்டினார்.
பின்னர், ஆட்டத்தில் டான் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதனால், உணவு இடைவேளையில் இருந்து தேநீர் இடைவேளையின்போது இவரது சதம் இரட்டை சதமானது. இதைத்தொடர்ந்து, முதல் நாளின் இறுதி செஷனிலும் இவரது மேஜிக் தொடர்ந்தது. இதனால், அவரது இரட்டை சதம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முச்சதமாக மாறியது. ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 458 ரன்களை குவித்தது. அதில், டான் மட்டும் 309 ரன்களை அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.
ஒரே நாளில் மூச்சதம் அடித்த வீரருக்கு ஸ்டான்டிங் ஓவேஷன் தந்த ரசிகர்கள் ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரர் இவர்தான். இவர் இந்த சாதனையை படைத்து 89 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், தற்போதைய சோ கால்ட் பெஸ்ட் பேட்ஸ்மேன்களாலும் இச்சாதனையை முறியடிக்கவில்லை.
18 நிமிடங்களில் சதம் அடித்த டான்:
டி20 கிரிக்கெட்டின் வருகைக்குப்பிறகுதான், வீரர்கள் 30 பந்துகளில் அசால்ட்டாக சதம் விளாசுகின்றனர். ஆனால், இவரோ 1931ஆம் ஆண்டு 22 பந்துகளில் அதுவும் 18 நிமிடங்களிலேயே சதம் விளாசி மிரட்டினார்.
1931 நவம்பர் 2, நியூ சவுத் வேல்ஸ் அடுத்துள்ள பிளாக்ஹீத் நகரில் புதிதாக கிரிக்கெட் மைதானம் தொடங்கப்பட்டது. இதனை முன்னிட்டு, பிளாக்ஹீத் XI - லித்கோ XI அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், பிளாக்ஹீத் அணியின் சிறப்பு விருந்தினராக டான் பங்கேற்றார்.
பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டான் சிறப்பு விருந்தினராக வந்தவர் சும்மா இருக்காமல், இப்போட்டியிலும் கலந்துகொண்டார். 6,6,4,2,4,4,6,1 இதை டெலிஃபோன் எண் என்று நினைக்க வேண்டாம். இது டான் முதல் ஓவரில் அடித்த ஸ்கோராகும் (அந்த போட்டியில் ஓவருக்கு 8 பந்துகள்). ஆம், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் அதிரடியாக விளையாடி அசத்தினார்.
முதல் ஓவரில் 33 ரன்கள் என்றால் இரண்டாவது ஓவரில் 6,4,4,6,6,4,6,4 என 40 ரன்கள் விளாசினார். இதையடுத்து, மூன்றாவது ஓவரில் 1,6,6,1,1,4,4,6 என 25 ரன்கள் அடித்தார். அந்த ஓவரில் பில் என்கிற சக ஓப்பனர் இரண்டு ரன் அடித்தார். ஆக, 22 பந்துகளிலேயே இவர் சதம் விளாச வெறும் 18 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார். இறுதியில் அவர் 14 சிக்சர்கள், 29 பவுண்ட்ரி உட்பட 256 ரன்களுக்குதான் ஆட்டமிழந்தார்.
அரிய சாதனையை நழுவவிட்ட நாயகன்:
1928ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இவர், 1948 ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதுவரை அதுவரை 79 டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய டான் பிராட்மேன் 12 இரட்டை சதம், 29 சதம் என மொத்தம் 6,996 ரன்களை அடித்திருந்தார்.
கடைசி இன்னிங்ஸில் போல்ட் ஆன டான் இவரது கடைசி இன்னிங்ஸில் நான்கு ரன்கள் அடித்தால் பேட்டிங் ஆவரேஜில் சதம் அடிக்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்காக இவர், களத்திற்கு செல்லும் போது ரசிகர்கள் எழுந்துநின்று கைகளைத் தட்டி அந்த God Father-க்கு ’காட் ஆஃப் ஹானர்’ தந்தனர். ஆனால், க்ரீஸுக்கு வந்த டான், இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் இவரது ஆவரேஜ் 99.94ஆக இருக்கிறது.
கிரிக்கெட்டின் பிதாமகனும், கடவுளும்:
டான் பிராட்மேனுக்குப் பிறகு பல பேட்ஸ்மேன்கள் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக ஜொலித்ததில், சச்சினும் ஒருவர். இவரது ஆட்டம் தனது ஆட்டத்தை நினைவூட்டுவதாக டான் பிராட்மேன் அறிவித்தார். இதனால், சச்சின்தான் அடுத்த டான் பிராட்மேன் என்று ரசிகர்கள் அழைத்தனர்.
குறிப்பாக, 1998-99இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் சச்சினும் இருந்தார். அப்போது, டான் பிராட்மேன் தனது 90ஆவது பிறந்தநாள் விழாவில் சச்சினை சிறப்பு விருந்தினராக அழைத்தார். பின் அந்தப் பிறந்தநாள் விழாவில் தனது ஆட்டோகிராஃப் செய்த பேட்டை சச்சினுக்குப் பரிசாக வழங்கினார்.
குறும்புக்கார டான்:
அவ்விழாவில் டான் பிராட்மேனிடம் நடந்த உரையாடல்களை, சச்சின் பின்நாட்களில் நினைவுகூர்ந்தார்.
“நீங்கள் இப்போ கிரிக்கெட் விளையாடினால் உங்களது பேட்டிங் ஆவரேஜ் எவ்வளவு இருக்கும் என கேட்டேன். அதற்கு 70 இருக்கும் என டான் கூறினார். 70 தானா ? ஏன் 70 ? என்று கேட்டதற்கு அவர் சிரித்துக்கொண்டே, 90 வயது மனிதனக்கு 70 ஆவரேஜ் இருப்பது ஒன்றும் மோசமல்லையே என பதிலளித்தார்.
டான் பிராட்மேன் என்றாலே அனைவருக்கும் அவரது பேட்டிங் சாதனைதான் நினைவில் வரும். ஆனால், எனக்கு அவரது இந்த சென்ஸ் ஆஃப் ஹியூமர்தான் நினைவுக்கு வரும். அவரை சந்தித்ததே எனது பாக்கியம் என சச்சின் டெண்டுல்கர் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.
பேட்டிங்கில் ஆவரேஜ் என்று மட்டுமில்லாமல், ஒரே டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் (974) அடித்த முதல் வீரர், டெஸ்ட் தரவரிசைப்பட்டியில் அதிக புள்ளிகளை (961) பெற்ற முதல் பேட்ஸ்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2,000 முதல் 6,000 ரன்களை வேகமாக எடுத்த முதல் வீரர் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார். டான் பிராட்மேனை கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய அரசு அவரது புகைப்படத்தை அஞ்சல் அட்டையாக வெளியிட்டது.
டானுக்கு பிறகு பல வீரர்கள் லெஜெண்டாக மாறினாலும், கிரிக்கெட்டின் முதல் லெஜெண்டும் டானும் அவர்தான். 1908, ஆகஸ்ட் 27இல் பிறந்த இவர் இன்று 111ஆவது பிறந்தநாளை எட்டியுள்ளார். கிரிக்கெட் உங்களை மிஸ் செய்கிறது டான் பிராட்மேன்....