தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2019, 9:48 AM IST

ETV Bharat / sports

முதன்முறையாக ஐசிசியின் நிரந்தர உறுப்பினரை வீழ்த்திய சிங்கப்பூர் அணி

சிங்கப்பூர் ஐசிசியின் நிரந்திர உறுப்பினரான ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் முதன்முறையாக சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

singapore

ஜிம்பாப்வே, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே-சிங்கப்பூர் அணிகள் மோதின. மழைக்காரணமாக இந்த போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய சிங்கப்பூர் அணிக்கு, அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோகன் ரங்கராஜன், சுரேந்திரன் சந்திரமோகன் ஆகியோர் அட்டகாசமான தொடக்கத்தை அளித்தனர்.

அவர்கள் இருவரும் 6.1 ஓவரில் 62 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ரோகன் 39 ரன்களில் (22 பந்துகள், 8 பவுண்டரிகள்) ரன்-அவுட்டாகினார். அவரைத் தொடர்ந்து சுரேந்திரன் 23 ரன்னிலும், அரித்ரா தத்தா 7 ரன்னிலும் வெளியேறினர். எனினும் பின்னர் வந்த டிம் டேவிட் 41, மான்பிரீத் சிங் 41 எடுத்து சிங்கப்பூர் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினர்.

இதனால் அந்த அணி 18 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் ரியன் பர்ல் 3, ரிச்சர்ட் கராவா 2, நெவில் மாட்சிவா, சான் வில்லியம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பத்தில் பிரய்ன் சாரியின் விக்கெட்டை இழந்தாலும் ரெகிஸ் சக்காபாவா, கேப்டன் சான் வில்லியம்ஸின் ஆகியோர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினர். பின்னர் 19 பந்தில் 48 ரன்கள் குவித்திருந்த ரெகிஸ் வெளியேறினார். அடுத்து வந்த டினோடெண்டா கேப்டனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடி 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனால் ஜிம்பாப்வே அணி 15 ஓவரில் மூன்று விக்கெட்டுகள் மட்டும் இழந்து 159 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், சிங்கப்பூர் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாததால், ஜிம்பாப்வே வீரர்கள் வரிசையாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை மட்டுமே குவித்து நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

சிங்கப்பூர் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணியை வீழ்த்தியது இதுவே முதல்முறை. ஐசிசியின் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும்போதிலும், அதில் 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் ஆடும் நிரந்திர உறுப்பினர்களாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details