குளோபல் டி20 கனடா கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் யுவராஜ்சிங், அப்ரிடி, சோயப் மாலிக் உள்ளிட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக விளையாடிவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் பிராம்டன் உல்ஃப்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மாலிக் 26 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடித்து 46 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போட்டியில் அவர் அடித்த இரண்டு சிக்சர்கள் பெவிலியன் கட்டடங்களிலிருந்த இரண்டு கண்ணாடிகளை பதம் பார்த்தது. அவர் அடித்த பந்து நேராக சென்று கண்ணாடியில் பட்டு நொறுங்கும் காணொலி குளோபல் டி20 ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. அந்தக் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.