உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு நடையைக் கட்டியது. இதையடுத்து, அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த இன்சமாம்-உல்-ஹக் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர், மிக்கி ஆர்த்தரை பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதைத்தொடர்ந்து, பல்வேறு வீரர்கள் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பொறுப்பு வகிப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராகவும் அவர் இருப்பார் எனவும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, பல்வேறு வீரர்களும் மிஸ்பாவிற்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், அவரை கலாய்க்கும் விதத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் ட்வீட் செய்துள்ளார்.தனது பதிவில்,
"முதலில் மிஸ்பாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர், தேர்வுக்குழுத் தலைவர் என இரட்டைப் பதவியில் பொறுப்பேற்ற அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சும்மா அவரை கலாய்த்தேன், அவர் வீரராக அசத்தியது போல தற்போது பயிற்சியாளர் பதவியிலும் கலக்குவார் என நம்புகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
சோயப் அக்தரின் இந்த பதிவை பார்த்தால், "ஐயா நீங்க தக்காளி சட்னிய நக்க மறந்துட்டீங்க!" என விவேக் கூறும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.