இந்தியாவில் முதன்மை உள்ளூர் கிரிக்கெட் போட்டியாக கருத்தப்படும் ரஞ்சி கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனுக்கான போட்டிகள் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஏற்கனவே முதல் இரண்டு சுற்றுப் போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாம் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.
இதில் டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க வீரராக கேப்டனும் இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ஷிகர் தவான் களமிறங்கினார்.
ஒருமுனையில் மற்ற டெல்லி வீரர்களான குனால் சண்டிலா (1), துருவ் ஷோரே (0), நிதிஷ் ராணா (25), ஜான்டி சித்து (15), லலித் யாதவ் (19), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஷிகர் தவான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இவரது சதத்தால் டெல்லி அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 66 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்களை எடுத்தது. தவான் 198 பந்துகளில் 19 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.