இந்திய கிரிக்கெட் வீரர் தோனி உலகக்கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இது குறித்து மவுனத்தை மட்டுமே பதிலாகக் கூறி வந்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
இதில், தான் பங்கேற்கவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு மாதங்கள் ஈடுபட இருப்பதாகவும் பிசிசிஐக்கு தோனி கடிதம் எழுதினார்.
பின்னர், அதற்கான பயிற்சியை மேற்கொள்வதற்கான அனுமதியை தோனிக்கு இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் வழங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ராணுவத்தின் துணைப்பிரிவான பாராச்சூட் ரெஜிமெண்ட் பிரிவில் அவர் இணைந்தார். மேலும் ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது.