செயின்ட் லூசியா:ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா ஆகியோரின் அதிரடியால் இந்திய மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தநிலையில், இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சேடன் நேஷன் 32 ரன்கள் அடித்தார். இந்திய மகளிர் அணித் தரப்பில் தீப்தி ஷர்மா நான்கு ஓவர்களில் 10 ரன்கள் வழங்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 104 ரன்கள் இலக்குடன் விளையாடிய இந்திய அணியில் 15 வயது இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால், இந்திய அணி 10.3 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 104 ரன்களை எட்டியதால், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப்போட்டியில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில், சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய வீராங்கனை ஷஃபாலி வர்மா 35 பந்துகளில் 10 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 69 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தத் தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது அரைசதம் இதுவாகும். முதல் டி20 போட்டியில் அவர் 73 ரன்கள் அடித்து சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்தார்.
இதையும் படிங்க:சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்த 15 வயது இளம் இந்திய வீராங்கனை
மறுமுனையில், இவருக்கு கம்பெனித் தந்து விளையாடிய ஸ்மிருதி 30 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய மகளிர் அணி இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 14ஆம் தேதி கயனாவில் நடைபெறவுள்ளது.