ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை மறுநாள் இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இந்திய அணியில், ஓராண்டிற்குப் பிறகு அணியில் இணைந்திருக்கும் அதிரடி வீரர் ரோஹித் சர்மா இடம்பெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் ரோஹித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளதால், தொடக்க வீரராக களமிறங்கிவந்த மயாங்க் அகர்வால் அடுத்த போட்டியில் களமிறங்க மாட்டார் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏனெனில் இந்தத் தொடரில் அவர் பங்கேற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்ததைத் தொடர்ந்து, அவர் விளையாடும் அணியில் தேர்வுசெய்யப்பட மாட்டார் என்றே தெரிகிறது.
ஆனால் காயம் காரணமாக உமேஷ் யாதவ் விலகியுள்ளதால், அவரது இடத்தை நிரப்புவது யார் என்ற போட்டி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
இதில் சைனி, நடராஜன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் முகமது ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர்களில் யார் விளையாடும் லெவனில் இடம்பெறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.