கிரிக்கெட்டில் ஒரு லெக் ஸ்பின்னரால் பந்தை இந்த அளவிற்கு சுழல வைக்க முடியுமா என அனைவரையும் வாயை பிளக்கும் வகையில், பந்துவீசிக் காட்டியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்னே. இவரது பந்துவீச்சு முறையைப் பார்த்தால் ஈசியாக பேட்டிங் செய்துவிடலாம் என்றுதான் முதலில் தோன்றும்.
ஆனால், அதை எதிர்கொண்ட பிறகுதான் வார்னேவின் பந்துவீச்சை சமாளிப்பது எவ்வளவு கடினம் என்பது புரியும். மிக எளிமையான பவுலிங் ஆக்ஷன் என்றாலும், பந்தை பல்வேறு இடத்தில், முறையில் சுழல வைப்பதில் பல வித்தைகளை காட்டுவார் அவர். சுருக்கமாக சொல்லப்போனால், பிட்ச்சில் எந்த இடத்திலிருந்து, எந்த இடத்துக்கு பந்து செல்ல வேண்டுமென அவர் கை சொல்வதை பந்து கேட்கும்.
வார்னே பந்துவீச்சில் போல்ட்டான ஆண்ட்ரூவ் ஸ்ட்ராஸ் இவரது காலகட்டத்தில் மற்றொரு தலைசிறந்த லெக் ஸ்பின்னராக விளங்கியவர் அனில் கும்ப்ளே. ஆனால், அனில் கும்ப்ளே பந்தை ஸ்பின் செய்யாமல் நேராக வீசக்கூடியவர். மறுமுனையில், வார்னே ஸ்பின் செய்வதில் பல வெரைட்டியை காட்டுபவர். பொதுவாக, ஜாம்பவான் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த போதுமான காலம் தேவைப்படுவது போல்தான் வார்னேவுக்கும் நேரம் தேவைப்பட்டது.
பேட்டிங்கில் தன்னை நிரூபிக்க சச்சினுக்கு எப்படி ’ஓல்ட் டிரஃபர்ட்’ மைதானம் உதவியதோ அதேபோல்தான் வார்னேவுக்கும். அங்கிருந்துதான் வார்னேவின் சுழற்பந்துவீச்சு எப்படி இருக்கும் என்பதை உலகமே தெரிந்துகொண்டது.
1993இல், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி ஓல்ட் டிரஃபர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் வார்னேவின் பந்துவீச்சை எதிர்கொண்டார். அப்போது, வார்னே வீசிய பந்து லெக் ஸ்டெம்ப்புக்கு வெளியே பிட்ச் ஆகி, ஆஃப் ஸ்டெம்பை தாக்கியது.
எப்படி இந்த அளவிற்கு பந்து சுழன்றது என புரியாமல் மைக் கேட்டிங் அதிர்ச்சியில் உறைந்தார். பின்நாட்களில் இதுதான் இந்த நூற்றாண்டில் வீசப்பட்ட சிறந்த பந்து (Ball of the century) என அங்கீகரிக்கப்பட்டது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், இங்கிலாந்து மண்ணில் வார்னே வீசிய முதல் பந்து இதுதான்.
அந்தப் போட்டிக்கு முன் வார்னே படைக்காத மேஜிக்கே இல்லை. ஒருநாள், டெஸ்ட் என இரண்டு விதமான போட்டிகளிலும் தனது சுழற்பந்துவீச்சினால் ஆஸிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தார். குறிப்பாக, 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற முக்கிய காரணமே வார்னேதான்.
ஆஸி.க்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 214 ரன் இலக்குடன் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 48 ரன்களுக்கு விக்கெட்டுகள் இழக்காமல் இருந்தது. அப்போது வார்னர் பந்துவீசத் தொடங்கிய பிறகு, தென்னாப்பிரிக்க அணி 61 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதேபோலதான், லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
1992 முதல் 2007ஆம் வரை வார்னேவின் ஸ்பின்னுக்கு அடிப்பணியாத அணிகளே இல்லை. 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், இந்தியாவுக்கு எதிராக அவரது ஸ்பின் அந்த அளவிற்கு க்ளிக் ஆகவில்லை. ஏனெனில், வார்னே இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம்தான் டெஸ்ட்டில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அவரால் 150 ரன்களுக்கு ஒரு விக்கெட்டைதான் வீழ்த்த முடிந்தது.
வார்னேவின் பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்று மற்ற இந்தியர்களுக்கு பாடம் எடுத்தவர் சச்சின். பின்நாட்களில், சச்சின் vs வார்னே பலப்பரீட்சையில் பலமுறை சச்சின்தான் வெற்றிபெற்றார் . சச்சின் வழியை டிராவிட், லக்ஷ்மண் ஆகியோர் கடைபிடித்து அவரது பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டனர்.
குறிப்பாக, 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டியை யாராலும் மறக்க முடியாது. அப்போட்டியில் லக்ஷ்மண் தனது சிறந்த ஃபுட் ஒர்க் மூலம் வார்னேவின் ஹேண்ட் ஒர்க்கை கூலாக ஹேண்டில் செய்தார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார்.
லெக் ஸ்பின்னில் பாகிஸ்தான் வீரர் அப்துல் காதிர் கொண்டு வந்த மாற்றத்தை அடுத்தக் கட்டுத்துக்கு எடுத்துச் சென்றவர் வார்னே.
நான்கு ஸ்டெப்புகள் நடந்து சின்னதாக ஒரு ஓட்டம் ஓடி அவர் சுழற்றிவிடும் பந்து பல எதிரணிகளை விழுங்கியுள்ளது. தற்போதைய கிரிக்கெட் ரூல்கள் பேட்ஸ்மேன்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கின்றன. ஆனால் வார்னேவை தற்போதைய கிரிக்கெட்டில் கொண்டுவந்துவிட்டாலும் அவரது சுழல் தற்போதையை பேட்ஸ்மேன்களை சுருட்டி வார்னேவின் பாக்கெட்டில் வைத்துவிடும். ஏனெனில் அவரிடம் சுழல் ஈர்ப்பு சக்தி உண்டு... பிறந்தநாள் வாழ்த்துகள் வார்னே.