வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான சூப்பர் 50 கோப்பை தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடரின் பார்போடாஸ் அணிக்காக சகோதரர்களான ஷாய் ஹோப், கெய்ல் ஹோப் இருவரும் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பார்போடாஸ் அணி வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையின் முடிவு இன்று (ஜனவரி 27) வெளியானது.
அதில், ஷாய், கெய்ல் ஹோப் சகோதரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இது குறித்து பார்போடாஸ் கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சூப்பர் 50 கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக பார்போடாஸ் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இப்பரிசோதனையின் முடிவில் ஷாய் ஹோப், கெய்ல் ஹோப் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும் சூப்பர் 50 கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீரர்களாக டெவின் வால்காட், சக்கரி மெக்காஸ்கி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: செல்சி அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் டச்செல் நியமனம்!