ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இதில், டிசம்பர் 17ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஷமி, கோலி இல்லாத இந்திய அணி:
இப்போட்டியின்போது கம்மின்ஸ் வீசிய பந்தில் இந்திய அணியின் முகமது ஷமி காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால், மீதமுள்ள போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தனது குழந்தை பிறப்பு காரணமாக மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார்.